Skip to main content

அமைச்சர் நிகழ்ச்சியில் பதற்றம் - பொதுமக்கள் ஆவேசம்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
அமைச்சர் நிகழ்ச்சியில் பதற்றம் - பொதுமக்கள் ஆவேசம்!

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் விழா ஒன்றில் பங்கேற்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார்.

இந்தநிலையில் அமைச்சர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, வெளியில் இருந்த வந்த நோயாளிகளின் உறவினர்கள், பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் அவர்களிடம் மருத்துவமனையின் அவள நிலை குறித்து எடுத்து கூறினர், இந்த மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது, மின்தடை அதிகமாக உள்ளது, போதிய குடிநீர் வசதிகள் இல்லை, மருத்துவமனை கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை இதனால் சுகாதார சீர்கேடுகள் அதிகமாக வர வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் மருத்துவமனை உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் ரூ.50 பணம் கேட்கின்றனர். பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு பணம் கேட்கிறார்கள். ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 பணம் கொடுத்தால் தான் குழந்தையை கண்களில் காட்டுகின்றனர் என புகார்களை அடுக்கி கூறினர்.



இவ்வாறு பொதுமக்கள் புகார் கூறுவதை பார்த்த மருத்துவமனை இயக்குநர் சாந்தி குணசிங், பொதுமக்களை சமாதானப் படுத்தினார். ஆனால் இதனை ஏற்காத பொதுமக்கள், அமைச்சர்கள் வந்திருப்பதால் தான் நீங்கள் எல்லாம் வெளியே வருகிறீர்கள். இல்லை என்றால் நீங்கள் எல்லாம் எங்கு இருக்கிறீர்கள் என்றே தெரியாது. நாங்கள் தினமும் படும் கஷ்டம் உங்களுக்கு தெரியாது. வெளியே உள்ள மருத்துவமனை காவலாளி முதல் உள்ளே ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் உதவியாளர் வரை அனைவரும் பணம் கேட்டு எங்களை தொல்லை செய்கின்றனர்.

நாங்கள் வசதி இல்லாததால் தான் அரசு மருத்துவமனை வருகிறோம், எங்களிடம் பணம் கேட்டால் நாங்கள் எங்கே சொல்வோம்? என ஆதங்கத்துடன் கூறினர். இதையடுத்து அவர்களில் 4 பேரை அமைச்சரிடம் புகார் தெரிவிக்க அழைத்து செல்வதாக அவர் கூறியுள்ளார்.



இதையடுத்து அமைச்சரிடம் அவர்கள் தங்கள் குறைகளை முறையிட்டனர். முதலில் மக்கள் புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் சிகிச்சையில் உங்களுக்கு எதேனும் பிரச்சனை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர்கள் சிகிச்சையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவமனையும், உழியர்களும் தான் பிரச்சனை என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்களுடன் மருத்துவமனை முழுவதும் சென்று குடிநீர் வசதி, கழிப்பறை சுத்தம் என அனைத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனை அலுவலர்கள், உதவியாளர்கள் என அனைத்து உழியர்களையும் அழைத்து பேசியுள்ளார்.

இதையடுத்து உங்கள் குறை அனைத்தும் ஆய்வு செய்தேன், தண்ணீருக்கு கூடுதலாக 2 போர் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். மின்சாரத்திற்கும் நான் பேசியுள்ளேன். இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என அமைச்சர் அவர்களிடம் உத்தரவாதம் அளித்தார்.

செய்தி, படங்கள்  - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்