1975ஆம் ஆண்டு வன்னியர் வளர்ச்சி கழகம் சார்பில் வழங்கிய பொது சொத்துக்கள் குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சிதம்பரம் நகரத்தில் பச்சையப்பன் பள்ளி எதிரே உள்ள வன்னியர்கள் வளர்ச்சி கழகத்தின் சொத்துக்களை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
இதனை ஆய்வுசெய்த அவர் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல துறையினரை கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்வதற்கு உத்திரவிட்டார். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் வன்னியர்கள் வழங்கிய பொது சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன.
சிதம்பரத்தில் 1975-ஆம் ஆண்டு வன்னியர் வளர்ச்சி கழகம் சார்பில் இந்த இடத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டுள்ளது. இந்த இடத்தை வழங்கியவர்கள் தற்போது இல்லை. அதன் பிறகு 20 வருடம் கழித்து அங்கு கட்டிடம் கட்டி பராமரிப்பில்லாமல் உள்ளது. அதன் பணிகளும் பாதியிலேயே உள்ளன. எனவே இதனை பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் வன்னியர் நல வாரிய பொது சொத்துக்கள் பராமரிப்பு அறக்கட்டளை மூலம் பராமரிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் இதுபோன்ற சொத்துக்கள் இன்னும் உள்ளதா? என கணக்கெடுப்பு பணியும் நடக்க உள்ளது. மேலும் இந்த சொத்துக்களை பராமரித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கலாமா என்பது குறித்த ஆய்வு குழு முடிவு செய்யும்” என்றார்.
இந்த ஆய்வின்போது அவருடன் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த், பிற்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.