ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நெய் தயாரிப்பு நிறுவனமான ஏஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். லட்டு விவகாரம் ஒருபுறம் பூதாகரமாகி வரும் நிலையில் பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்திலிருந்து நெய் வாங்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இதனையடுத்து, பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக தமிழக அரசின் சார்பில் இது சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்தது.
மேலும், திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனம் பழனி கோவிலுக்கும் நெய் தருவதாக தவறான தகவலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தவறாக பரப்பியதாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் மீது காவல்துறையில் அறநிலையத்துறை புகார் அளித்தது.
இந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழக கோவில்களில் ஆவின் நெய் பயன்படுத்தப்படுகிறது. தமிழகக் கோவில்களுக்கு நெய் ஆவின் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டிலே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் நெய் தொடர்பாக விஷமத் தகவல் பரப்பிய பா.ஜ.க நிர்வாகி வினோஜ் செல்வம் மீது புகார் தரப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது 2000 ஆண்டுகள் கனவு ஆகும். பணி நியமன ஆணை வழங்கும் முன் திட்டத்திற்கு தடை வாங்க முயன்ற கூட்டம் இன்று அதை தடுக்க முயற்சிக்கிறது. பல சிக்கல்களுக்கு பின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டத்தை முதல்வர் நிறைவேற்றினார். தமிழக கோவில்களில் 92,000 பேர் நாள்தோறும் அன்னதானம் மூலம் பயன்பெறுகின்றனர். கோவில் அன்னதானப் பணிகளை ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.