தமிழக அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை வெளியிட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை, இரண்டாவது முறையாகச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை வெளியிட்டதாக பண்ருட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடும் என முன்ஜாமீன் கேட்டு பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வேலுமணி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்தார். அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஜோதிகுமார் ஆஜராகி மனுதாரர் வேண்டுமென்றே அமைச்சரைப் பற்றி பொய்யான கருத்தைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது. மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறினார்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே தாக்கல் செய்த பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாகவும் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஜோதிகுமார் கூறினார்.