திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், காப்பிலியபட்டியில் புதிய உரக்கிடங்கு திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரக் கிடங்கை திறந்து வைத்த பின்னர் பேசும்போது, "ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் தொகுதிக்கு உட்பட்ட 72 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த உரக் கிடங்கு அமையப்பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பெறப்படும் குப்பைகள் இந்த உரக்கிடங்கிற்கு கொண்டுவந்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைந்து 22 மாதங்களில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 30 கோடி ரூபாய் அளவில் திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.70 கோடியிலான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனையே இருக்காது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தி பல திட்டப் பணிகளை செய்து வருகிறார்" என்று கூறினார்.