கரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்களைப் பாதுக்காக்க, பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யப்படும் மருத்துவ உதவிகள் போன்றவற்றைக் கேள்வி எழுப்பி ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து அந்தந்த மாவட்ட தி.மு.க. மா.செக்கள் கேள்வி எழுப்பி மனு தந்து வருகின்றனர். அதன்படி ஜூலை 4ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மா.செவுமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, வடக்கு மா.செ தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. போன்றோர், ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனுவை தந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலு, தமிழ்நாட்டில் கடந்த ஜுன் 3 ஆம் தேதி 25,872 பேர் கரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 465 பேர் மட்டுமே பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றுவரை 2,181 பேர் பாதிபடைந்தும், 12 பேர் இறந்தும் உள்ளனர்.
இதனை உணர்ந்து தான் எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை மூலமாக அரசாங்கத்திற்கு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்து வருகிறார், ஆனால் இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை.
நமது மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த் தொற்று பரவிவருகிறது. நம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களை மிஞ்சுகிற வகையில் நோய்த் தொற்று திருவண்ணாமலையில் அதிவேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில் பச்சை நிற மண்டல பிரிவில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் இன்று சிகப்பு நிற அபாய மண்டல பிரிவில் உள்ளது.
கரோனாவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மருத்துவமனை, ஆரணியில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுக்கா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. அரசு அலுவலகங்களே மூடுகின்ற அளவில் இன்று நோய்த் தொற்று பரவி வருகிறது. இதற்குக் காரணம் தகுந்த முன் ஏற்பாடுகள் எடுத்திருக்க வேண்டும் அப்படி எந்த ஏற்பாடும் செய்ததாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் காரணம். அவரால் தான் இந்த மாவட்டம் கெட்டு குட்டிச்சுவராகி உள்ளது, அவர் செயல்படாததால் இந்த மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவியுள்ளது.
எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, என்னன்ன நடவடிக்கைககள் எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பி மனு தந்துவிட்டு வந்துள்ளோம், பதில் கிடைக்கப்பெற்றதும் தலைமையின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றார்.