‘சேவல் சண்டை வன்முறைக்கு அல்லவா வழிவகுக்கும்? அதை ஒரு விழாவாகவே நடத்தி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு வழங்கியது சரிதானா?’ என்று கேள்வி எழுப்பியதோடு, 2014-ல் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிகாட்டிய விலங்கு நல ஆர்வலரான கண்ணன் “சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. மனிதர்களின் ஏற்பாட்டில்தான் இரண்டு சேவல்களும் சண்டையிட்டுக்கொள்கின்றன. வீரியத்துடன் சண்டையிட வேண்டும் என்பதற்காகவும், எதிரி சேவலுக்கு காயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவும், சேவல்களுக்கு மதுபானம் கொடுக்கின்றனர். ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்குவதைப் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.
ஒரு சேவல் இன்னொரு சேவலைத் தாக்கிக் காயப்படுத்தி, ரத்தம் சிந்த வைத்து, காயம் பட்ட சேவல் கடைசியில் உயிரிழப்பதை, தாக்கிய சேவலின் வெற்றியாகவும், அதன் உரிமையாளரின் வெற்றியாகவும் கொண்டாடுகின்றனர். மனிதத் தன்மை உள்ள யாரும் இத்தகைய குரூர மகிழ்ச்சியை விரும்பமாட்டார்கள். இதுபோன்ற சண்டைகளைக் காணும் சிறுவர்களும் மற்றவர்களும் மனரீதியாக தவறாக வழிநடத்தப்பட்டு, வன்முறைப் பாதைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உள்ளது. கடந்த 1960-ம் ஆண்டின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் 11(ஏ) பிரிவானது, எந்த மிருகத்துக்கும் எவ்வித வதையும் ஏற்படுத்துவதை தடை செய்கிறது. ஆகவே, எல்லா உயிரினங்களையும் கருணையுடன் நடத்த வேண்டிய அடிப்படை கடமை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. தேவையின்றி எந்த உயிரினத்தையும் வதை செய்யவோ, காயம் ஏற்படுத்தவோ மனிதர்களில் யாருக்கும் உரிமை இல்லை.” என பெருமூச்சு விட்டவாறே வாசித்து முடித்தார்.
விழாவை நடத்திய விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தரப்பில், “ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே, தொன்றுதொட்டு பொழுதுபோக்கிற்காகவும், பாரம்பரிய சேவல் இனங்களைப் பாதுகாக்கும் பொருட்டும், வீர விளையாட்டாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. அதனால், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கில், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று 2019-ல் அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். சேவல் சண்டையில் இரண்டு வகை உண்டு. சிவகாசி தொகுதியில் நடந்தது கத்திக்கால் சண்டை கிடையாது. வெற்றுக்கால் சண்டைதான். அதனால்தான் நடத்த முடிந்திருக்கிறது.” என்றனர்.
சிவகாசியில் நடந்த வெற்றுக்கால் சேவல் களப் போட்டியில், 100 களங்கள் அமைக்கப்பட்டு, 1500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. ஒவ்வொரு போட்டியும் ஒருமணி நேரம் நடந்தது. இதில், தலா 15 நிமிடங்கள் போட்டி என்றும், இடைவேளை என்றும் மாறி மாறி விடப்பட்டது. வட்டத்துக்கு வெளியே சேவல் சென்றாலோ, தலை துவண்டாலோ, ஓடினாலோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டி சேவல்கள் இரண்டும் இறகுகளை விரித்து, பறந்து சண்டையிட்டபோது, ஆர்ப்பரித்தது கூட்டம்.
வெற்றி பெற்ற 800 சேவல்களுக்கும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகள் வழங்கினார். தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில், தனது தொகுதி மக்களைக் குஷிப்படுத்த, இந்தச் சேவல் சண்டை அமைச்சருக்குக் கை கொடுத்துள்ளது.