தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை தேர்வு செய்யத் தமிழக ஆளுநர் மூன்று தேடல் குழுக்களை அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னால் நியமிக்கப்பட்ட தேர்தல் குழுவை தான் திரும்பப் பெறுவதாக நேற்று ஆளுநர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், யுஜிசியின் விதிமுறைகளைப் பின்பற்றி தமிழக அரசு உரிய வகையில் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைக்கும் என நம்புவதாகவும், எனவே தன்னால் அமைக்கப்பட்ட துணை வேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவைத் திரும்ப பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “துணை வேந்தர் தேர்வு குழுவை தமிழக அரசு நியமிக்கலாம் என்ற ஆளுநர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆளுநருடன் தமிழ்நாடு அரசு சண்டையிடத் தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.