கரூர் மாவட்டம் கொசூர் என்ற இடத்தில் மினி கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அங்கு புதிய கட்டடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தை தற்காலிக மினி கிளினிக்காக பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி நேற்று (31.01.2021) மினி கிளினிக் திறப்பு விழா தமிழக போக்குவுரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் எளிமையான முறையில் நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா கிளினிக்கை திறந்து வைத்து மருத்துவப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு நடைபாதையின் கைபிடி சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் அதனருகில் நின்றிருந்த குழந்தை உட்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த அசம்பாவித சம்பவத்திற்காக பெரும்தன்மையுடன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் அப்பகுதி மக்கள் சமாதானம் அடைந்தனர்.