பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அமைச்சர் நாசர், “உழவுத் தொழிலுக்கு மூல காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரே நிகழ்வு இந்த பொங்கல் திருநாள். விவசாயம் செழிக்க எப்படி மண் வளம் முக்கியமோ எப்படி நீர் வளம் முக்கியமோ அதுபோல்தான் சூரிய ஒளியும் மிக அத்தியாவசியமானது. உழவுக்கு காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகத்தான் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலேயே உழவுக்கு காரணமான சூரியனுக்கு நன்றி செலுத்துகிற ஒரே நாடு தமிழ்நாடு. இதேபோல் உலகத்தில் ஜப்பான் நாட்டில் மட்டும்தான் சூரியனுக்கு நன்றி செலுத்தப்படுகிறது. உழவுத்தொழில் முக்கியம் என்பதை உணர்ந்த அரசு போன முறை 21 வகையான பொருட்களை மக்களுக்கு கொடுத்தது. இம்முறை 1000 ரூபாய் சேலை, வேட்டி, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ கொடுத்துள்ளது.
அந்த வகையில் நாம் தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழ்க் கலாச்சாரம் என்ற வகையில் எந்த கோணத்திலும் மாறாமல் இருக்கிறோம். திராவிட உணர்வோடு இருக்கும் நாம் அதே நேரத்தில் நாட்டுப் பற்றுடன் இருக்கிறோம்” எனக் கூறினார்.