இன்று காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அருகேயுள்ள வார்டுகளில் இருக்கும் நோயாளிகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அந்த வார்டில் இருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியே அழைத்து வந்துவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு உள்ளே சென்று பார்க்கும்போதுதான் பாதிப்பு அளவு தெரியவரும்" எனக் கூறினார்.