தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று காலை கூடிய சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்காத நிலையில், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் இயற்றப்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவடைந்த பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாண்புமிகு முதல்வர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை நடுத்தர மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, நீட் தொடர்பாக மாண்புமிகு ஆளுநர் தெரிவித்த கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, இந்த சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.