தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பேரவையில் இன்று (19/03/2020) நடந்த விவாதத்தின் போது பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ், "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். குடும்ப அட்டை வைத்துள்ளோர் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ரூபாய் 62.25 கோடியில் 18 இடங்களில் 41,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். 21 நவீன அரிசி ஆலைகளில் கருப்பு அரிசியை நீக்கும் அதிநவீன இயந்திரம் ரூபாய் 18.90 கோடியில் நிறுவப்படும்.
கொள்முதல் நிலையங்களுக்கு ரூபாய் 1.75 கோடியில் 500 நெல் தூற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். உணவு தானியங்களை பாதுகாக்க சேமிக்க ரூபாய் 20 கோடியில் 500 இடைச்செருகு கட்டைகள் கொள்முதல் செய்யப்படும். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூபாய் 25 கோடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அரிசி ஆலை அமைக்கப்படும். தினமும் 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய புதிய நவீன ஆலை நிறுவப்படும். தேனி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் ரூபாய் 5 கோடியில் குளிர் பதனக்கிடங்குகள் கட்டப்படும்" என்றார்.
தமிழகத்தில் 4.51 லட்சம் சர்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றம் என சட்டப்பேரவை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.