உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்துவரும் நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்," மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அதிமுக ஆதரித்தது குறித்து எதிர்க்கட்சிகள் அனைவருமே ஒவ்வொரு விதமாகப்பேசி வருவது ஏற்க முடியாதது.
![Minister Kamaraj about Citizenship Amendment Bill issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/fPPJG3VV8H-TUbYiU_96LK-ng6O14pfj1WyOThN3DBs/1576486331/sites/default/files/inline-images/11_60.jpg)
அவர்கள் கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரிக்க வேண்டும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு திருத்தங்கள் குறித்து அதிமுகவின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் பேசியுள்ளனர்.
எனவே எங்களது திருத்தங்களைச் சொல்லி தான் நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். மேலும் அதிமுக என்பது தற்போது பா.ஜ.க.-வின் கூட்டணியில் இருந்து வருகிறது. வேறு வழியில்லாமல் மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அதே வேளையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது நல்லது என்று நாங்கள் கூற முடியாவிட்டாலும் கூட்டணி தர்மத்திற்காக ஆதரவளிக்கும் நிலை எங்களுக்கு இருந்துவருகிறது.
எனவே இந்த சட்டத் திருத்த மசோதாவில் இருந்துவரும் நிறை குறைகளை சுட்டிக் காண்பித்து தான் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த போதும் மேல்-சபையில் பாமக தனது ஆதரவினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.