திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நலத்திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார்.
அதன்பின் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வைகை அணையிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு வழியோர கிராமங்களான நிலக்கோட்டை மற்றும் அருகில் உள்ள பேரூராட்சிகள், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி அதன் பின்பு திண்டுக்கல் வரை குடிதண்ணீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சியின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதோடு தினசரி குடிதண்ணீர் கிடைக்கும் நிலைமை உருவாகும்.
ஆத்தூர் தொகுதியில் உள்ள ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் வசிக்கும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி இரண்டு கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதுதவிர திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவல்சரகு ஊராட்சி பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலன்களைக் காக்கும் வண்ணம் மாபெரும் தொழிலாளர் நல மருத்துவமனை (இ.எஸ்.ஐ) அமைய உள்ளது. நவீன வசதியுடன் கட்டப்பட உள்ள இந்த மருத்துவமணை மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குறிப்பாகத் தமிழகத்தில்தான் பெண் சமூகத்தை முன்னேற்றும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயராது உழைத்து வருகிறார். அவருக்கு நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பிலால்உசேன், ஆத்தூர் மார்கிரேட்மேரி, பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.