திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்ளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முதன்மை கல்வி அலுவலர் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஐ.பெரியசாமி போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு விதிமுறைகளை வாசிக்க, அரசுத் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சி பிர திநிதிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், 203 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியதால் கடந்த 10 வருடங்களாக புரையோடிய போதைப் பொருள்கள் புழக்கம் இன்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளியின் வளர்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பங்கு அதிகம் உள்ளது.
ஒரு சமுதாயத்தின் அடித்தளம் பள்ளியில் தான் உருவாகுகிறது. திருமலைராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு எல்லா வகைகளிலும் நாம் உறுதுணையாக இருந்துள்ளோம். தி.மு.க. ஆட்சியின் போது 10 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதிலிருந்து, கட்டிடங்கள் அமைப்பதிலிருந்து அனைத்திற்கும் நிதி உதவி வழங்கியுள்ளோம். இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிவதால் தலைசிறந்த பள்ளியாக இந்த பள்ளி உள்ளது. மாணவர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பழக்கத்தின் விளைவுகள் தெரியாமல் மாணவர்கள் பழக்கதை ஏற்படுத்திவிட்டு அதனை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்படுத்திவிடும்.
இளம் வயதில் மாணவர்கள் அறியாமல் பழகும் இந்த போதை பழக்கவழக்கம் மாணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தாரையும் பாதிக்கும். மாணவர்கள் மட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி எதிர்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. நல்ல உடல் நலத்துடன் மாணவர்கள் வாழ்ந்து உயர்கல்வி கற்க வேண்டும் என்று மாணவ சமுதாயத்தை வாழ்த்துகிறேன். தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டியை அவர்கள் பயன்படுத்தி நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.