
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3,000 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய நீதிமன்றம், அவருக்கான நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முதன்மை நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக நாடியது. அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் என அறிவுறுத்தியது. இதையடுத்து மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தர், ஆர். சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து விலகுவதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அறிவித்திருந்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வு திங்கட்கிழமை (04.09.2023) விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார்.