கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவிக்கான ஆணை மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டார்.
அண்ணா கிராமம், பண்ருட்டி, விருத்தாச்சலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர், ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள பட்டதாரி அல்லாத 25 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் 53,75000 மதிப்பீட்டிலும் 300 பட்டதாரி பயனாளிகளுக்கு ரூ 50,000 வீதம் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி உதவியும், 515 கிராம் தங்க நாணயம் 2 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும் மொத்தம் 4 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் வழங்கினார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பேசுகையில், 'தமிழக முதலமைச்சர் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் சிரமமின்றி உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை பெறும் புதுமைப்பெண் திட்டம், பேருந்துகளில் மகளிர் காண இலவச பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்கும் நிலையை ஊக்குவித்து அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏழைப் பெண்களின் வாழ்வில் மென்மேலும் உயரத் திட்டம் செயல்படுத்தி வருகிறது' என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.