நெல்லை மாவட்டம் கூட்டப்புளி பகுதியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை பற்றி மத்திய அரசு எங்களிடம் சொல்லும் பொழுது நாங்கள் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் பி.எம் ஸ்ரீ ஸ்கூல்ஸ் என்ற கான்செப்ட்டை கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் 16,500 பள்ளிகளை கொண்டு வர இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
நாங்கள் அவர்களிடம் சொன்னோம் பிஎம் ஸ்ரீ ஸ்கூல்களை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இதனை எங்களுடைய ஸ்டேட் லெவல் கமிட்டி முடிவு செய்யும். ஏனென்றால் உங்களுடைய மறைமுக கொள்கை என்னவென்று எங்களுக்கு தெரியாது. தமிழ்நாடு காலங்ககாலமாக தரமான கல்விதான் வழங்கிக் கொண்டிருக்கிறது. கமிட்டி அமைத்து அந்த கமிட்டி என்ன பரிந்துரை செய்கிறதோ அதை பொறுத்து முடிவு செய்வோம் என்று சொல்லி இருந்தோம். தொடர்ந்து இது தொடர்பாக தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்'' என்றார்.