ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது, அதை ஒருபோதும் விட மாட்டோம் என்கிறார் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
"திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தை மையமாக வைத்து இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், ஆலத்தூர், புழுதுகுடி, கோட்டூர், சேந்தமங்கலம், பள்ளிவர்த்தி, தண்ணீர் குன்னம், 57 குலமாணிக்கம், சேந்தங்குடி, பாவட்டக்குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 27 கிணறுகள் உட்பட 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறுகள் அமைத்துக்கொள்ள தற்போது சுற்றுசூழல் ஆய்வு அறிக்கை (Enviroinment Impact Asessment Report) தயார் செய்ய மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே 2013ல் பெரியகுடி கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் தோண்டப்பட்ட கிணற்றில் கட்டுங்கடாத வாயுக்கள் வெளியேறி மிகப்பெரிய அளவில் பேராபத்து ஏற்பட்டது, அதை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
மேலும் அதன் அருகே விக்கிரபாண்டியத்தில் புதிய கிணறு அனுமதியின்றி அமைக்க முதற்கட்ட பணிகள் துவங்கியபோது, அதை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்காக எங்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பொய் வழக்கு போட்டு சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் வழக்கில் சேர்த்து 5 ஆண்டு காலமாக கீழ் நீதிமன்றத்திலேயே முழுமையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து, மேல் கோர்ட்டு விசாரணைக்கு கொண்டு சென்று வழக்கை முடிக்காமல் திட்டமிட்டு காலம் கடத்தும் சதி செயலில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையை பயன்படுத்தி நீதிமன்றத்தையும் எங்களையும் அலைகழித்து மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பயந்து விடுவோம் என்று நினைத்து தற்போது பெற்றுள்ள அனுமதியை பயன்படுத்தி ஓ.என்.ஜி.சி. புதிய கிணறுகளை அமைக்க முற்பட்டால் விடமாட்டோம், தீவிர போராட்டங்களில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன். தமிழக முதலமைச்சர் தலையிட்டு பொய் வழக்கை ரத்து செய்ய முன்வர வேண்டுகிறேன்" என்றார்.