லால்குடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசந்தம் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுசெய்தார். பள்ளி வகுப்பறை, கழிவறை போன்றவற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து அதே வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும் ஆய்வுசெய்தார். ஆய்வைத் தொடர்ந்து பள்ளியில் முதலாம் வகுப்பில் செயற்கை விண்ணப்பத்தினை ஒரு மாணவிக்கு இன்று (07.08.2021) வழங்கினார்.
அன்பில் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பார்வையிட்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சிப் பொருட்களைப் பார்த்தார். மேலும், பள்ளியின் கட்டட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வகம், வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளியில் விளையாட்டு மைதானம் பகுதியில் வகுப்பறை கட்டுவது குறித்து கோட்டாட்சியரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து புள்ளம்பாடி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் சேர்க்கை குறித்து பள்ளியின் அடிப்படை வசதி குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைகளின் தேவை குறித்தும் கேட்டறிந்தார். அதேபோல் அங்கன்வாடி பணியாளர்களின் பணி குறித்தும் கேட்டறிந்தார். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.