சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் இதர பணியாளர்களுக்கு தமிழக அரசின் கரோனா நிவாரண நிதி ரூ 4000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமை தாங்கினார். வேளாண்மை உழவர் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கி திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டத்தில் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் 467 கோயில்களில் பணிபுரியும் 467 பணியாளர்களும், இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 59 கோயில்களில் பணிபுரியும் 74 பணியாளர்களும் என மொத்தம் 541 பேருக்கு இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ 4,000 வீதம் 21 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோல், சமூக நலத்துறையின் மூலம் மூன்றாம் பாலினத்தவர் நிவாரண உதவித் தொகை ரூ 2000 மற்றும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் அமைச்சர் வழங்கினார். இதில் தகுதியான மூன்றாம் பாலினத்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 353 அவர்களுக்கு தலா 2000 வீதம் 7 லட்சத்து 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
அதேபோல் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 வயதுக்குட்பட்ட கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டு தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, இந்து அறநிலை துறை மண்டல இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர்கள். சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.