இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்றின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம் ''என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு. நான் காலேஜ் ஆரம்பிச்சபோது அந்த புத்தகத்தை படித்தேன். அப்போது முதல் மனசை விட்டு அது வெளியே போகவே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னனுக்கு பிறகு இந்த படம்தான் எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போய்விட்டது. ஆனால் இன்றைக்குதான் எனக்கு புரிந்தது, எதனால் அந்த படம் நின்றது என்று. எங்களுக்காக விட்டு வைத்துவிட்டு போய்விட்டார். இதனை பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள்.
நானே மூன்றுமுறை முயற்சி செய்தேன். 1980 மற்றும் 2000 அடுத்து 2010 ஆகிய வருடங்களில் படத்தை எடுக்க ட்ரை பண்ணினேன். எனவே இந்த படம் எவ்வளவு பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி என்று எனக்கு தெரியும். இதில் நடித்திருக்கக் கூடிய கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி என எல்லாருடைய பங்களிப்புடன் சேர்ந்துதான் இது நிகழ்ந்துள்ளது. இல்லையென்றால் இதை என்னால் செய்திருக்க முடியாது. கரோனா காலத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதையும் தாண்டி என்னுடன் பயணித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி'' என்றார்.