லீ மெரிடியன் ஓட்டலை எம்.ஜி.எம். எடுத்துக்கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னை கத்திபாரா சந்திப்பில் உள்ள அப்பு ஓட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான லீ மெரிடியன் ஓட்டல், கடந்த 2000ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 3.44 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஓட்டலில் மொத்தமாக 240 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 1,500 பேருக்கு விருந்தளிக்கும் வகையில் டைனிங் ஹால் உள்ளது. இப்படியான ஓட்டலை எம்.ஜி.எம். நிறுவனம், ரூபாய் 423 கோடிக்கு கையகப்படுத்த இருந்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது.
அப்பு ஓட்டல் நிறுவனத் தலைவர், ரூபாய் 1,600 கோடி மதிப்புள்ள சொத்தை ரூபாய் 423 கோடிக்கு கையகப்படுத்துவது நியாயமில்லை என தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், லீ மெரிடியன் ஓட்டலை எம்.ஜி.எம். எடுத்துக்கொள்ளத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக லீ மெரிடியன் ஓட்டலை எம்.ஜி.எம். நிறுவனம் வாங்கியதாகக் கூறப்பட்டது. அங்கு மருத்துவமனை கட்ட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது குறிப்பிடத்தக்கது.