காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தற்போது 119 அடியை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இதனால் இன்று (09.11.2021) காலை 5 மணி முதல் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உபரி நீராக தற்போது மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மின் நிலையம் வாயிலாக 4 ஆயிரம் கனஅடி நீரும், சுரங்க மின்நிலையம் வாயிலாக 16 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் நீர் திறக்கப்படும் பாதையில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் மதகுகள் வழியாக நீர் திறக்கப்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டினால் 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையத்தில் 150 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் வழித் தடத்தில் மொத்தமுள்ள 7 கதவணைகளிலும் தலா 30 மெகாவாட் வீதம் 210 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் வெளியேற்றப்படும் நீரைப் பயன்படுத்தி மொத்தம் 410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.