Skip to main content

பேத்திகளைக் கிணற்றில் போட்ட பாட்டி - கள்ளக்குறிச்சி அருகே சோகம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

image

 

மனநிலை பாதிக்கப்பட்ட பாட்டி ஒருவர் தனது பேத்திகளைக் கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள நிறைமதிகிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் - கலைவாணி தம்பதிக்கு ரிஷிகா (3), அமுதவல்லி (2) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள், திருஞானசம்பந்தனின் மனைவி கலைவாணி பிறந்த ஊரான உதயமாம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளனர்.  

இரவு அங்கேயே தங்கியிருந்துள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருஞானசம்பந்தத்தின் இரு பெண் குழந்தைகளையும் காணவில்லை. பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுப்புறங்களில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் தேடிவிட்டு தியாகதுருகம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். அப்போது கலைவாணியின் தாயார் வள்ளியம்மை (48) மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. மனநிலை பாதிப்பின் காரணமாக அவர் குழந்தைகளை ஏதாவது செய்திருக்கலாம் என்று கருதிய காவலர்கள், அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது ஒரு காவலர் வள்ளியம்மையிடம் 200 ரூபாய் பணம் தருகிறேன். உனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு குழந்தைகளை கொடு என்று கேட்டுள்ளார்.

 

உடனே வள்ளியம்மை அவர்களை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள பலராமன் என்பவரது விவசாய கிணற்றைக் கொண்டுபோய்க் காட்டியுள்ளார். கிணற்றை எட்டிப் பார்த்த அனைவரும் பதறிப்போனார்கள். கிணற்றில் இருகுழந்தைகளும் இறந்து கிடந்தனர். குழந்தைகளின் உடலைப் பார்த்து அவருடைய பெற்றோர்களும் உறவினர்கள் ஊர்மக்களும் கதறி அழுதனர். பாட்டி வள்ளியம்மையோ எதுவும் நடவாதது போல எங்கோ பார்த்தபடி ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

 

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தியாகதுருவம் போலீஸார் வள்ளியம்மையைக் கைது செய்ய உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்