Skip to main content

மருத்துவ போலி இருப்பிடச் சான்றிதழ் ஊழல் குறித்து விசாரணை தேவை! அன்புமணி

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
மருத்துவ போலி இருப்பிடச் சான்றிதழ் ஊழல் குறித்து விசாரணை தேவை! அன்புமணி

நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டது ஒருபுறம் என்றால், மறுபுறம் போலி இருப்பிடச் சான்று மோசடிகள் மூலம் மீதமிருந்த வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன. மருத்துவ போலி இருப்பிடச் சான்றிதழ் ஊழல் குறித்து விசாரணை தேவை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்று கொடுத்து இடம் பெற்ற 9 மாணவர்கள் மீது சென்னை பெருநகரக் காவல்துறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக மாணவர்களுக்கு  கிடைக்க வேண்டிய இடங்கள் முறைகேடாக பறிக்கப்பட்ட மிகப்பெரிய ஊழலின் ஒரு துளியே ஆகும். இந்த முறைகேடுகள் கண்டிக்கத்தக்கவையாகும்.

தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்ற வரை இத்தகைய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், தேசிய அளவில் நடந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேநேரத்தில் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் சேர முடியும் என்பதால், பிற மாநிலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அங்குள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காதோர் தமிழகத்திலுள்ள மருத்துவக்  கல்லூரிகளில் சேர முடியாது. அதனால் தமிழகத்தில் வசிப்பதாகக் கூறி போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர அதிகாரிகளின் துணையுடன் முயற்சி நடைபெறுகிறது.

அவ்வாறு போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றதாக 9 பேர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 4 பேர் தங்களுக்கு கிடைத்த இடத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மோசடி புகார் தரப்பட்ட 9 பேருடன் முடிவடைந்துவிடவில்லை என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களில் 189 பேரின் பெயர்கள், கேரள மாநில மருத்துவ மாணவர் சேர்க்கை தர வரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்ததாக ‘யூத் ஆர்ஜ்’ என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது. 

அதுமட்டுமின்றி, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 1269 மாணவர்கள்  போலி சான்றிதழ் கொடுத்து விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஆந்திரத்தைச் சேர்ந்த 188 பேர், தெலுங்கானாவைச் சேர்ந்த 149 பேர் உட்பட 932 பேருக்கு தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகின்றன. இம்முறைகேட்டால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

போலி இருப்பிடச் சான்றிதழ் மோசடி இரு வழிகளில் நடைபெற்றிருக்கிறது. ஒன்று தவறான வருவாய்த் துறை அதிகாரிகளை வளைத்து போலியான இருப்பிடச் சான்றிதழை பெறுவது ஆகும். இரண்டாவது அவ்வாறு பெறப்பட்ட போலி இருப்பிடச் சான்றிதழைக் கண்டறிந்து அவர்களின் பெயர்களை தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கத் தவறியதாகும். அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்து விட்ட காலத்தில் போலி இருப்பிடச் சான்றிதழை கண்டுபிடித்து நீக்குவது கடினமான காரியமல்ல. அண்டை மாநிலங்களில்  தயாரிக்கப்பட்ட மருத்துவ தரவரிசைப் பட்டியலை வாங்கி, அதனுடன் கணினி மூலம் ஒப்பிட்டுப் பார்த்தாலே போலி இருப்பிடச் சான்றிதழ்களை அடையாளம் கண்டிருக்கலாம். மராட்டிய மாநில மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற போலி இருப்பிடச் சான்றிதழ் மோசடி இந்த முறையில் தான் கண்டுபிடித்து நீக்கப்பட்டது. ஆனால், இதை செய்ய தமிழக அரசு தவறியது மர்மமாகவே உள்ளது.

இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மாணவர்களின் நீட் தேர்வுக்கான 9 இலக்க வரிசை எண்களைக் கொண்டு தான் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கான 8 இலக்க பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது இயல்பாக நடந்த தவறா... அல்லது இதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடந்த மோசடியா? என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டது ஒருபுறம் என்றால், மறுபுறம் போலி இருப்பிடச் சான்று மோசடிகள் மூலம் மீதமிருந்த வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்கள் செய்யாத தவறுக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி இந்த மோசடிக்கு துணை போன அனைவரையும் தண்டிக்க வேண்டும். போலி சான்றிதழ் கொடுத்து இடம் பெற்ற பிற மாநில மாணவர்களை நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை வழங்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்