மருத்துவ மேற்படிப்பு சான்றிதழ்களை கல்லூரியில் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு;அரசுக்கு நோட்டீஸ்
அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றவும், அதுவரை அவர்களின் சான்றிதழ்களை கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு சேரும் மாணவர்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும், அதுவரை உண்மை சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து 2016ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், சான்றிதழ்களை திரும்ப தர உத்தரவிட கோரியும் சென்னையை சேர்ந்த ராஜ் சாந்தன் உள்பட 40 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மேற்படிப்பிற்கு பின் கூடுதல் படிப்பு படிக்க இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் அனைத்து சான்றிதழ்களும் தேவை. சான்றிதழை திரும்ப கேட்ட போது அதை தர கல்லூரி நிர்வாகம் மறுக்கிறது என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- சி.ஜீவா பாரதி