தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
'ஒமிக்ரான்' கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்களில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, இன்று (02/12/2021) மதுரை சர்வதேச விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நேரில் ஆய்வுசெய்தார். பின்னர், விமான நிலைய அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் மதுரையிலிருந்து கார் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனின் காரானது, மதுரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் கார் நிறுத்தும் இடத்திலிருந்து வெளியேறும்போது, அங்கிருந்த தடுப்பு கம்பியில் மோதி சிறிய விபத்து ஏற்பட்டது. இருந்தாலும், இதில் அதிர்ஷ்டவசமாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் காயம் ஏதுமின்றி, உயிர் தப்பினார். பின்னர், வேறுறொரு கார் மூலம் அவர் திருச்சி விமான நிலையத்திற்குச் சென்றார்.
இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.