இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நேற்று இந்தியா முழுக்க வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணி செய்த 3 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.2000 வீதம் மொத்தம் 3 பேர்களுக்கு ரூ. 6,000 பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களின் 3 மாணவ, மாணவிகளுக்கும் முறையே ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 ரொக்கம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு ரூ. 15,000 ரொக்கமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் மேயர் வழங்கி பாராட்டினார்.
மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 16 நபர்களுக்கு சுழல் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் காந்தி அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு காந்தி சந்தை அருகில் நிறுவப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளின் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.