தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் திமுகவும் தேர்தல் பிரச்சாரங்களை தற்போது தொடங்கியுள்ள நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் தனது முதல் பிரச்சாரத்தை தொடர்ந்த நாளில் இருந்து தொடர்ந்து கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அவருடன் வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தடுத்து நிறுத்தப்பட்ட பிறகும் குத்தாலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடித்து அடுத்த பகுதிக்கு செல்ல முயன்ற பொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்பொழுது திமுகவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் 6 மணிக்கு விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 மணிக்கு வரை விடுதலை செய்யப்படாத நிலையில் 8 மணிக்காவது விடுதலை செய்யப்படுவார் என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
10 மணி ஆன நிலையிலும் அவர் விடுதலை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. இதனால் குத்தாலம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள திமுகவினர் அங்கு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனியார் மண்டபம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி, மயிலாடுதுறை எஸ்.பி ஆகிய இருவரும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் 7 மணிநேரத்திற்கு பிறகு உதயநிதி விடுதலை செய்யப்பட்டார்.