சுருக்குமடி வலைக்கு அனுமதி தர கோரிக்கை விடுத்து மயிலாடுதுறையில் மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பலையாறு முதல் சந்திரப்பாடி வரையிலான 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி தரக் கோரிக்கை விடுத்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே சுருக்குமடி வலைக்கு அனுமதி தரவேண்டும் அல்லது அனுமதி தர மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ல் விதிக்கப்பட்டுள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று மாலை மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த போராட்டமானது காலவரையின்றி தொடரும் என மீனவர்கள் போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவும் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் மயிலாடுதுறை மடவாமேடு உட்பட நான்கு இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் எந்தவித அரசு அதிகாரிகளும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், மடவாமேடு கிராமத்தில் உள்ள மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.