மயிலாடுதுறையில் மண் எடுக்கும் பிரச்சனையில் நிலத்தின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயத் தொழில் செய்து வரும் இவருக்கு வீட்டின் பின்புறம் நிலம் ஒன்றும் உள்ளது. இந்த நிலத்திலிருந்து செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கர் என்பவரிடம் சுமார் 40,000 ரூபாய்க்கு விலை பேசி உள்ளார். இதற்கான முழுத்தொகை கொடுக்கப்படாததாகக் கூறப்படும் நிலையில் சில நாட்களாக அந்த பகுதியில் மண் எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மண் எடுக்கும் பகுதிக்குச் சென்ற ராஜேந்திரன் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த பொழுது விவசாயி ராஜேந்திரன் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மண் எடுக்க வந்தவர்களிடம் முழு தொகையை கேட்டு ராஜேந்திரன் வாக்குவாதம் செய்ததாகவும் முழு பணத்தை கொடுத்தால்தான் மண் எடுக்க வேண்டும் என மண் எடுக்க வந்த டிராக்டரின் சாவியை பிடுங்கச் சென்றதாகவும் அப்போது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால், பாஸ்கரனின் ஆட்கள் மண்வெட்டி உள்ளிட்டவற்றால் ராஜேந்திரன் தலையில் தாக்கியுள்ளனர் என்றும், இதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்த அவர் உயிரிழந்தார் என ராஜேந்திரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையேல் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் உரிமையாளர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன், டிராக்டர் ஓட்டுநர் பாலு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.