உலகத்தையே அச்சுறுத்தும் ஒற்றைச் சொல் கரோனா. அந்த கரோனா வைரஸ் நம் உடலுக்குள் செல்லாமல் பாதுகாக்க கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதுவரை மூக்கு, கண் போன்ற பகுதிகளை தொடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு விளம்பரங்களை செய்து வருகின்றன
மேலும் அனைவரும் மாஸ்க் பயன்படுத்தினால் கரோனா வைரஸ் மட்டுமின்றி எந்த கிருமியும் நம்மை தாக்காது என்கின்றனர். அதனால் உலகமெங்கும் வழக்கத்தை விட மாஸ்க் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த அவசரத் தேவையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் சில கும்பல்கள் ஏற்கனவே மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தி தூக்கி வீசிய மாஸ்களை சேகரித்து அதனை குடோன்களில் வைத்து துடைத்து சுத்தம் செய்து மீண்டும் விற்பனைக்கு அனுப்பும் வேலையை தொடங்கியுள்ளனர்.
வடமாநிலம் ஒன்றில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பதிவு இந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. குப்பை மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ள பயன்படுத்திய பழைய மாஸ்களை சில பெண்கள், ஆண்கள் பிரித்து சுத்தம் செய்து அடுக்கி வைக்கிறார்கள். அதன் பிறகு புதிய பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப உள்ளதாக இந்த வீடியோ காட்டுகிறது.
இந்த பழைய பயன்படுத்திய மாஸ்க்களில் உள்ள கிருமிகளே புதிதாக பயன்படுத்துவோருக்கும் பரவி வேறு நோய்களையும் பரப்ப வாய்ப்புகள் உள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஒவ்வொரு மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.