சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர்களுக்கு தீட்சிதர்கள் ஆகமவிதி, மரபுகளை மீறி திருமணத்திற்கு அனுமதி கொடுத்து ஆடம்பரமாக திருமணம் நடத்தி உள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரபுகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தை திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து அறநிலைத்துறையின் கட்டுபாட்டில் கோயில் இருந்தால் மரபு மீறப்படும் புனிதம் கெட்டுவிடும் என்று கூறினார்கள் தீட்சிதர்கள். ஆனால் தற்போது தீட்சிதர்கள் புனிதம் கெட்டு போகும் வகையில் ஆயிரங்கால் மண்டபத்தை மாற்றியுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசு தனி சட்டம் இயற்றி கோயிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.