கோவையில் கல்லூரி மாணவிகளூக்கு
தற்காப்பு கலை பயற்சி முகாம்
கோவையில் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக கல்லூரி மாணவிகளிடையே நடத்தப்பட்ட தற்காப்பு கலை பயிற்சி முகாம் பெரும் வரவேற்பை பெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரிகளில் துவங்கி பணி செய்யும் பணியிடங்கள் வரை நீண்டு வருகிறது. தற்போது இந்த வன்முறைகள் வீட்டிலும் அதிகரித்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ளும் உடல் வலிமையைவிட அதற்கான மனவலிமையே பெண்களுக்கு தற்போது அதிகளவில் தேவைப்படுகிறது.
எல்லா பெண்களும் சில ஆயிரங்களை செலவு செய்து தற்காப்பு பயிற்சிகளை பயின்று கொள்வது சாத்தியமற்றது என்ற நிலையில் சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் சில மணி நேர பயிற்சியிலேயே இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட யூத் பவுண்டேசன் அமைப்பு மற்றும் கிருஷ்ணம்மாள் அறக்கட்டளை சார்பில் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் முன்னாள் கடற்படை லெப்டினண்ட் ஈசன், இராணுவ லெப்டினெண்ட் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் மகாலட்சுமி மற்றும் இளமதி ஆகியோர் கூறும் போது தங்களுக்கு இப்பயிற்சி தன்னம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தனர். பயனுள்ள இப்பயிற்சியால் தங்கள் குடும்பத்தினர் கொண்டுள்ள அக்கறை காக்கப்படும் எனவும் வெளியில் செல்லும் போது ஏற்படக்கூடிய இடர்களை எதிர்கொள்ளும் துணிவு கிடைத்துள்ளதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.
- அருள்