ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைப் பூர்த்தி செய்யும் பணிக்காக 9489092000 என்ற வாட்ஸ்-அப் எண் சேவையின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி புதிய வாட்ஸ் அப் எண் சேவையைத் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறித்து தெரிவிக்க, புகார் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் புதிதாக வாட்ஸ் அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை வாட்ஸ் அப் மூலமாகவே தெரிவிக்கலாம். இந்தப் புகார் அந்தந்த அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகச் செல்லும். ஒரு பிரச்சனைக்கு எவ்வளவு காலத்திற்குள் தீர்வு காண முடியும் என்று உறுதியாக கூற முடியாது. காரணம், சில புகார்களுக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணலாம். இன்னும் சில பிரச்சனைகள் வாரங்கள், மாதங்கள் என காலம் பிடிக்கலாம்.
இனிமேல் எந்த ஒரு கட்டடத்தையும் விதிமுறைகளை மீறி கட்ட முடியாது என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம். ஒரு கட்டடம் விதிமுறைக்கு உட்பட்டுதான் கட்டப்படுகிறதா என்பதைப் பறக்கும் படை குழுக்கள் கண்காணிக்கும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழைய கட்டடத்தைப் பொறுத்தவரை நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்.
சாயக்கழிவு நீர், நிலத்தடி நீர் மாசு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிகள் செய்துவருகிறோம். சோலார் பகுதியில் மிகப்பெரிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கையும், அதற்கான ஆய்வுப் பணியும் நடந்துவருகிறது. இது சம்பந்தமாக உயரதிகாரிகளும் பேசிவருகின்றனர். இதைப்போல் ஈரோட்டில் தமிழ்நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக மிக பிரம்மாண்டமாக ஒரு காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டைவிட பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளுக்கான ஆய்வு நடந்துவருகிறது.
‘டெக்ஸ்டைல்ஸ் யுனிவர்சிட்டி’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் நீர்வழி புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ. 30.85 கோடி மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கிவைத்தார்.