திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் ஜமீன் என்பது இம்மாவட்டத்தில் பிரபலமானது. ஜமீன்தாரர் என அழைக்கப்படும் மகேந்திரபந்தாரி விவசாயம் உட்பட பல தொழில்கள் செய்து வருகிறார்.
இவர்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வேட்டவலம் ஜமீன் பங்களாவுக்கு அருகில் மனோன்மணியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், ஐம்பொன்சிலைகள், அம்மனுக்கான தங்க நகைகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.
கடந்த 2017 ஜனவரி 9ந் தேதி, அந்த மரகதலிங்கம், அம்பாள் தாலி, ஓட்டியாணம் என சில விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வேட்டவலம் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு ஓராண்டுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் மே 15ந் தேதி மதியம் அந்த மரகதலிங்கம், ஜமீன் பங்களா உள்ள பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்ததாக கூறி அதனை கைப்பற்றியுள்ளனர். ஜமீன் பங்களாவில் வேலை செய்யும் 50 வயதான பச்சையப்பன் என்பவர் குப்பைகொட்டும்போது அந்த சிலை கிடைத்துள்ளது. அதனை அவர் தண்ணீர் தொட்டியில் வைத்துள்ளார். இதுபற்றிய தகவல் தெரிந்து போலீஸார் வந்து கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றனர்.
மரகதலிங்கம் கிடைத்ததை தொடர்ந்து வேட்டவலம் வந்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஐீ பொன்மாணிக்கவேல் வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளார். மரகதலிங்கம், போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருடுபோன அன்று பல போலீஸார் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத மரகதலிங்கம் இப்போது குப்பையில் கிடைத்தது எப்படி, திருடிக்கொண்டுபோன மற்ற பொருட்கள் கிடைக்கவில்லை. அப்படியாயின் அந்த பொருட்களை விற்பனை செய்ய முடிந்தவர்களால் மரகதலிங்கத்தை விற்பனை செய்ய முடியவில்லையா, அதனாலயே குப்பையில் போட்டுள்ளனரா. அப்படியாயின் திருடர்கள் வெளியாட்கள் இல்லை, இந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும் என சந்தேகம் கிளப்புகிறார்கள் இப்பகுதி மக்கள்.