மன்னார்குடிக்கு பாதாள சாக்கடை திட்டம், புதிய பேருந்து நிலையம் என நகரின் நாற்பத்தைந்தாண்டு கால கோரிக்கைகள் நிறைவேறியதாக ஆனந்தமடைந்து பொதுமக்களும், வர்த்தகர்களும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பேருந்து நிலையம் கட்டப்பட்டு 48 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் பிரதானமான பயன்பாட்டு கட்டடங்கள், கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் பயணிகள் காத்திருக்கும் இடங்கள் அனைத்துமே சேதமடைந்து பயன்படுத்த முடியாமலும், குற்றங்களின் இருப்பிடமாகவும் இருந்துவந்தன.
பயன்பாடின்றி கிடக்கும் பேருந்து நிலையத்தை அகற்றி வர்த்தகர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லாமல் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என வர்த்தகர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். சட்டமன்றத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக இதுகுறித்து அழுத்தம் தந்துவந்தார் டி.ஆர்.பி. ராஜா. மேலும், நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் எழுப்பிவந்தார்.
இந்நிலையில், நேற்று (24.08.2021) நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் மன்னார்குடி நகராட்சிக்கு, பாதாள சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம், நகராட்சி விரிவாக்கம் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த அறிவிப்பை அறிந்து பொதுமக்களும், வர்த்தகர்களும், திமுகவினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, மன்னை நாராயணசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய வர்த்தகர்கள், "கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் எத்தனை முறை அழுத்தம் கொடுத்தும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததுமே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, எங்களின் கனவை நிறைவேற்றியுள்ளனர்" என்று தெரிவித்தனர்.