Skip to main content

’மாஞ்சோலை எஸ்டேட்டில் தோண்டத் தோண்ட வெடிகுண்டு.’’

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
’மாஞ்சோலை எஸ்டேட்டில் தோண்டத் தோண்ட வெடிகுண்டு.’’



நெல்லை மாவட்டம் அம்பை வட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையின் தென் மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அடி உயரத்திலிருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். இதற்கும் மேலே உள்ள மலை முகடுகளில் காக்காச்சி, குதிரைவெட்டி நாலுமுக்கு உள்ளிட்ட நான்கு எஸ்டேட்கள் பல அடி உயரத்திலிருக்கின்றன. வெயில் காலங்களில் ஊட்டியை மிஞ்சும் ரம்மியமான குளிர் பிரதேசமாகிவிடும் இந்த எஸ்டேட் பகுதிகள். மேலும் இந்தப் பகுதிகள் பல வன உயிரினங்கள் வாழ்வதால் இவைகள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அவைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகிவிடுகிறது.

அத்துடன் மாஞ்சோலை, குதிரை வெட்டி, காக்காச்சி, நாலுமுக்கு போன்ற அனைத்து எஸ்டேட் பகுதிகளும் தேயிலை தோட்டங்களைக் கொண்டதால் அவைகள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தொட்டே பிரிட்டிஷ் ஆட்சியினரிடமிருந்து மகராஷ்டிராவைச் சேர்ந்த கம்பெனிகள் குத்தைக்கு எடுத்திருப்பது இன்றளவும் தொடர்கிறது. அதன் காரணமாக இந்தத் தேயிலைத் தோட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உட்பட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த அடி மட்டத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த மக்கள் அங்கேயுள்ள குடியிருப்புப் பகுதியிலேயே தங்கியிருப்பதால் தங்களுக்கான அத்யாவசியப் பொருட்களை தரை மட்டத்திலிருக்கும் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளுக்கு வந்து வாங்கிச்செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில் மாஞ்சோலைப் பகுதிகளில் உள்ள தேயிலை செடி மற்றும் வன உயிரினங்களை உன்னி நாயர் மகன் உமேஷ் என்பவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் 5ம் கார்டு பகுதியில் ஆராய்ச்சியிலிருந்த போது அப்பகுதியில் கிடந்த பிளாஷ்டிக் பொட்டலத்தை எடுத்துக் கல் மீது வீசினார். அப்போது அது பலமான சப்தத்தோடு வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



இதனிடையே அப்பகுதியில் மேலும் வெடிகுண்டுகள் உள்ளதாகக் கிடைத்த  தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு தடுப்புப் படைபிரிவு அதிகாரி அன்புராஜ் தலைமையில் வன அலுவலர் வெள்ளத்துரை முருகராஜ், வனக்காப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த சமயம் அங்குள்ள கொய்யா மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டைக் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்தனர்.

இது தொடர்பாக அம்பை, வனத்துறையினர் மற்றும் கல்லிடைகுறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டுகள் மேலும் பதுக்கப்பட்டுள்ளதா. அவைகள் எங்கு, தயாரிக்கப்பட்டு, எந்த நோக்கத்திற்காக அங்கு பதுக்கப்பட்டது அல்லது உயிரினங்களை அழிக்கும் திட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் மண்டலத்தின் மலைகளின் அரசி, வெடிகுண்டுகளை உள்ளடக்கியிருப்பது பரபர விஷயமாகியிருக்கிறது.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்