தெற்கு ரெயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயப்பணி வழங்கப்படுவது குறித்தும், மாற்றுத்தினாளி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் அதன் துணைப்பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம் பேசுகையில்,
கரோனா பரவல் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி தொடர்ந்து நீட்டித்தும் வருகிறது. ரயில்வே சரக்கு மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கி வருகிறது. இதற்காக அத்தியாவசியப் பணிகளில் மட்டும் குறைந்த அளவில் ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
மார்ச் 25 மற்றும் 27 தேதிகளில் மத்திய அரசின் பர்சனல், பொதுக் குறைபாடு மற்றும் ஓய்வூதியத் துறை ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் பணியமர்த்துவது, பணிச்சூழல், இதர கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதை மேற்கோள்காட்டி ரயில்வே துறைக்கும் இது தொடர்பாக வாரிய நிர்வாக இயக்குநர் அலோக் குமார் மார்ச் 27 ஆம் தேதி உத்தரவிட்டார்.
ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளை ரயில்வே பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுத்தவும் இவர்களுக்கு விதிவிலக்கு என அதில் தெளிவுபடுத்தி இருந்தார். மாற்றுத்திறனாளிகள் உடல் தடுமாற்றம் தவிர்க்க இயற்கையாக கைகளைப் பல்வேறு இடங்களில் ஊன்றவோ பிடிக்கவோ செய்வார்கள். கரோனா தொற்று எளிதில் ஏற்படக்கூடும் எனக் கருதி அரசு இந்த உத்தரவை வெளியிட்டது.
காசிநாதன்
இதற்கு இடையில் விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்த காசிநாதன் கடந்த மே 15 ஆம் தேதி இரவு வீட்டில் வயர் மூலம் காசிநாதன் தூக்குப்போட்டுள்ளதும், வயர் அறுந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வெளியேறி இருந்ததும், தெரியவந்தது. அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், மதுரைக்கு தன்னை அவ்வப்போது பணிக்கு அனுப்பும் நிலையில், தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் எப்படி 120 கிலோ மீட்டர் செல்ல முடியும். இதுவே இந்த முடிவுக்கான காரணம், என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் காசிநாதனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் 680 மாற்றுத் திறனாளிகள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். இதில் சுமார் 60 மாற்றுத் திறனாளிகள் மேற்பார்வையாளர்கள் கட்டாயத்தால் ஊரடங்கு நேரத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அப்பட்டமான மனித உரிமை மீறல் இது. மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது.