மதுரை உசிலம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வேலைப்பார்த்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திரைப்படம் பார்ப்பதற்காக கல்லுப்பட்டி அருகே உள்ள திரையரங்கிற்குச் சென்று விட்டு அதிகாலை 1 மணியளவில் தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போலீசார் வேடனைப் பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். பின்பு சந்தேகத்தின் பேரில் வேடனை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்து வேடனை போலீசார் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரம் தூங்கியிருக்கிறார். பின்னர் அவரது பெற்றோர் வேடனை எழுப்பிய போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேடன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக வேடனின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்திருப்பதாக வேடனின் உறவினர்கள் மருத்துவமனையில் வளாகத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துவருகின்றனர். உசிலம்பட்டி டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து வேடனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே என்ன நடந்திருக்கும் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.