கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப் பகுதிகளில் காட்டு யானைகள் விளை நிலங்களை நோக்கி படையெடுப்பது மற்றும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் விளை நிலங்களில் தஞ்சம் அடைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
காட்டுக்கொலை கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் இன்று காலை மோட்டுபட்டி அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு வந்த காட்டு யானைகளைப் பார்த்த அவர் அவற்றுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் உயிரிழந்தார். அகரம் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்குள்ள யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இப்படி ஒரு உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.