சேலம் வழியாக கேரளா சென்ற ரயிலில் கஞ்சா கடத்திச்சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக ரயிலில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சேலம் ரயில்வே பாதுகாப்புப்படையினர் சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்ற சிறப்பு ரயில் புதன்கிழமை (ஜன. 5) அதிகாலையில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது.
அந்த ரயிலில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகளிடமும், அவர்களின் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்தப் பெட்டியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அந்த வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் ஹரிபால் (23) என்பதும், திருப்பூருக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. கரோனா பரிசோதனைக்குப் பிறகு, அவரை சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.