கோவை நகரில் சமீபகாலமாக இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரை வியாபாரம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்தி போதை அடைவதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதுபற்றி தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம், போதை மாத்திரை விற்போர் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரை கைது செய்தும்வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (20.07.2021) வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவரின் மகன் பெக்கி என்கிற ரசீது (32) என்ற வாலிபரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் பெண் ஒருவரை சோதனை செய்தனர். அதில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் சிக்கிய இருவரிடம் நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பிடிப்பட்டவர்கள், குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் மனைவி பானு (50) மற்றும் ரியாஸ் (33) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து போலீஸார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நசுருதீன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.