
சேலம், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் எழுது பொருள்கள் கொள்முதல் செய்ததில் 9.50 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த புகாரின்பேரில் முன்னாள் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்கள், பதிவேடுகள், நோட்டு புத்தகங்களை அரசு அச்சகங்களிலும், எழுது பொருள்கள் உள்ளிட்ட அலுவலக பயன்பாட்டு பொருள்களை மாவட்ட கூட்டுறவு சங்கங்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளாட்சித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இப்பொருள்களை கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு மேல் கொள்முதல் செலவு அதிகரிக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் மட்டும் திடீரென்று 9.49 லட்சம் ரூபாய்க்கு எழுது பொருள்கள், பதிவேடு நோட்டு புத்தகங்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்ததாக போலி ரசீதுகள் மூலம் அரசு நிதி கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஆய்வாளர் முருகன் விசாரணை நடத்தினார். அதில், கன்னங்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் 9.49 லட்சம் ரூபாய்க்கு நிதி முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் கன்னங்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய ஆறுமுகநாயனார், இளநிலை உதவியாளர் கோபிராஜா, சேலம் மண்டல பேரூராட்சிகள் முன்னாள் உதவி இயக்குநர் முருகன் ஆகியோர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஆறுமுக நாயனார், தற்போது தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலராகவும், கோபிராஜா, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.