திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49க்கும் மேற்ப்பட்டவர்கள் மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர்.
அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டதட்ட பல நாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர். இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் நெல்லை மாவட்ட செயலாளர் ராஜகுணசேகர பாண்டியனுக்கு கிடைத்துள்ளது.
அவர் இதனை திருவாடானை எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனருமான கருணாஸிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள குமார் என்பவர் மூலமாக சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட கருணாஸ், மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது சம்மந்தமாக பாராளுமன்ற அதிகாரிகள், மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் குலசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் காமாட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து முறையிட்டார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் மலாக்கா அதிகாரிகள் ஜக்கி, கண்ணன், குணா ஆகியோர் மூலமாக 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.