Skip to main content

திருச்சியில் 'அஞ்சாதே போராடு' மாநாடு... மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவிப்பு!!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

திருச்சியில் வரும் 23ம் தேதி மாலை திருச்சி உழவர் சந்தை மாநகராட்சி திடலில், மக்கள் அதிகாரம் சார்பில் CAA-NRC-NPR வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும் என்ற நோக்கில் மாநாடு நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. போலீசாரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாரின் உத்தரவை ரத்து செய்து மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு,

சி.ஏ.ஏ., என்.பி.ஆர் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற கோரிக்கைக்காக தமிழகம் தொடர் போராட்டங்களால் குமுறிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் இரவு பகலாக போராட்ட களத்தில் இருப்பது அனைவரும் பின்பற்ற தக்கவையாக உள்ளது.

 

makkal athikaram Organization Announces !!


தமிழக முதல்வர் சட்டமன்ற உரையில் சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஆதாரம் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், வரலாற்று ஆய்வாளர்கள், மெத்த படித்த உயர்கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள் கடந்த இரண்டு மாதமாக குடியுரிமை சட்டத்தின் அபாயத்தை விளக்கி களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். சி.ஏ.ஏ.வுக்க எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் வரை பலியாக உள்ளனர். உலக நாடுகள் பல கண்டித்திருக்கின்றன. அசாமில் கண்முன்னே பல லட்சம் மக்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு வதை முகாமை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் குடியுரிமையை நிரூபிக்க சொல்லி ஆதார் அட்டையை ரத்து செய்து ஆயிரம் முஸ்லீம்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். எனவே என்.ஆர்.சியின் முன் தயாரிப்பான என்.பி.ஆர். திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் பா.ஜ.க. ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வே தனது நடவடிக்கையால் அதை துரிதப்படுத்துகிறது. தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காமல் துன்பப்படும் மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்க முனைகிறது. இன்று நாட்டில் நிலவுகின்ற அமைதியற்ற சூழல் அனைத்திற்கும் காரணம் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. தான். இரண்டையும் எதிர்த்து போராடி முறியடிப்பதற்கான ஒரு அறைகூவலாக இம்மாநாடு நிகழ இருக்கிறது.

இந்த மாநாட்டில்,

 

makkal athikaram Organization Announces !!


ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார். பதவியை ராஜினாமா செய்த மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில், எழுத்தாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி கொலை வழக்கின் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பாலன், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தியாகு, டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தலைவர், ஆராய்ச்சி மாணவர் சாய் பாலாஜி, மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆகியோர் மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

மக்கள் கலை இலக்கிய கழக கலைக்குழுத் தோழர்கள் கோவன் தலைமையில் கலைநிகழ்ச்சி நடத்த உள்ளனர். சி.ஏ.ஏ.வை எதிர்த்து பாடி வரும் ராப் பாடகர், தெருக்குரல் அறிவு கலைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.

வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம், மருது, செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம், கோவன், புரட்சிகர பாடகர், ம.க.இ.க., லெ.செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்