ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்களை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விற்பனைக் கூடங்களில் எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்; எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 12 இடங்களில் 6 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழகத்தில் அனைத்து வழிகளிலும் உறிஞ்சப்படும் ஒரே பிரிவினர் உழவர்கள் தான். ஒருபுறம் அரசு மறுபுறம் சந்தை அமைப்புகள் என உழவர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். குறிப்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர்கள் மீது அங்குள்ள அதிகாரிகளால் நடத்தப்படும் சுரண்டல்கள் எல்லையில்லாதவை. அவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 2016&ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 6351 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 381 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருக்கும் போதிலும், அவற்றில் மிக முக்கியமானது உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஆகும். இது ஒருபுறமிருக்க குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்யும் உழவர்களிடம் செய்யப்படும் ஊழல் கொடுமையானது.
உழவர்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. உதாரணமாக எந்த ஒரு பொருளையும் எடை போட்டுத் தருவதற்காக மூட்டைக்கு ரூ.20 வழங்க வேண்டும்; ரசீது போட்டுத்தர ரூ.50 வழங்க வேண்டும் என்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பணம் தர மறுக்கும் உழவர்களை அங்குள்ளவர்கள் தரக்குறைவாக பேசுவதுடன், மூட்டைக்கு 2 அல்லது 3 கிலோ எடையை குறைத்து பதிவிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய பணத்தை கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் உழவர்கள் சில நேரங்களில் நாள் கணக்கில் கூட வெட்ட வெளியில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. உழவர்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இதுதான் உதாரணமாகும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் ஊழல்களை மதிப்பிட்டால் அது மலைக்க வைக்கும் தொகையாக இருக்கும். இதனால் ஏற்படும் அத்தனை இழப்புகளும் உழவர்களுக்குத் தான். உடனடியாக இந்த ஊழல்களை தடுக்கவும், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியும் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக தற்போதைய வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இதற்கு முன் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக இருந்தவர் என்பதால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் அனைத்து அத்துமீறல்களையும் அறிந்தவர். ஆனாலும், அவர் உழவர்களுக்கு துணை நிற்காமல் ஊழல் & முறைகேடுகளுக்கு துணை நிற்கிறார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்களை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விற்பனைக் கூடங்களில் எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்; எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 12 இடங்களில் 6 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
1) 27.3.2018 காலை 10.00 மணி- திருக்கோவிலூர், மாலை 3.00 மணி- விழுப்புரம்.
2) 28.3.2018 காலை 10.00 மணி- கள்ளக்குறிச்சி, மாலை 3.00 மணி -உளுந்தூர்பேட்டை
3) 2.4.2018 காலை 10.00 மணி- வந்தவாசி, மாலை 3.00 மணி- சேத்பட்.
4) 3.4.2018 காலை 10.00 மணி- திருவண்ணாமலை, மாலை 3.00 மணி- போளூர்.
5) 4.4.2018 காலை 10.00 மணி- விருத்தாசலம், மாலை 3.00 மணி- சிதம்பரம்.
6) 5.4.2018 காலை 10.00 மணி- கடலூர், மாலை 3.00 மணி- பண்ருட்டி.
அனைத்து இடங்களிலும் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுசாமி ஆகியோர் தலைமை வகிப்பார்கள். உழவர் பேரியக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற உழவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பார்கள்.