மதுரை ரிசர்வ்லைன் 6ஆம் படை பட்டாலியன் காவலர் குடியிருப்பில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றிவரும் முருகசுந்தரத்தின் மகளான ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில், குறைந்த மதிப்பெண் எடுத்ததால், தனியார் நீட் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டிற்கான தேர்வு எழுதுவதற்காக படித்துவந்துள்ளார்.
நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், வீட்டில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த மாணவி துர்கா, நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் தெரிவித்து மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் நீட் தேர்வைக் கண்டித்து மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடற்கூராய்வுக்குப் பின் மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கபட்டபோது மாணவியின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உடல் தத்தனேரி மின்மயானத்திற்கு கொண்டுசெல்லபட்டு தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக தத்தனேரி மயானத்தில் வைக்கப்பட்ட மாணவியின் உடலுக்கு அ.ம.மு.க, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தியதோடு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.